நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் சிறந்த அணி என்றாலும், தோனிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் – சென்னை அணிகளின் மோதலுடன் தொடங்கியது. அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
அதன்பின்னர் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் ஆட்ட்த்திலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் – சென்னை அணிகளே மோதின.
அதில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தோல்வியை தழுவிய குஜராத் அணியோ, தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற 2வது குவாலிபையர் போட்டியில் மும்பை அணியை சுருட்டி வீசி பைனலுக்கு முன்னேறியுள்ளது.
இதனால் தொடரின் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை போலவே இறுதி போட்டியிலும் சென்னை அணியை எதிர்கொள்கிறது குஜராத்.
இரு அணிகளில் பலம் பலவீனம்!
சென்னை அணியை பொறுத்தவரை, கான்வோ, ருத்துராஜ், ரஹானே, துபே, ஜடேஜா என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை வைத்துள்ளது. ஆனால் பந்துவீச்சில் சொதப்பி வருகிறது. முதல் குவாலிபையர் போட்டியில் 15 எக்ஸ்ட்ரா ரன்களை சென்னை பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கியதே அதற்கு நல்ல உதாரணம்.
அதேநேரத்தில் குஜராத் அணியோ, பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் தரம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. பேட்டிங்கில் சுப்மன் கில், சாய் சுதர்சன் சஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, மில்லர், ரஹீத் கான் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் முகமது ஷமி, ரஷீத், மொஹித் சர்மா ஆகியோர் மிரட்டுகின்றனர்.
இதனால் அணிகளின் பலத்தை பொறுத்தவரை குஜராத் அணியின் கையே மேலோங்கியுள்ளது. மேலும் சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி ரசிகர்களின் ஆதரவும் அவர்களுக்கு கைகொடுக்கும்.
தோனிக்காக மனம் விரும்புகிறது!
இந்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவானும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கோப்பையை யார் வெல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும். ஏனெனில் எம்எஸ் தோனிக்காக இன்னொரு முறை சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றால் அருமையாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸூக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தான் எனக்கு பிடித்த 2வது விருப்பமான அணியாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் சிறந்த அணி என்றாலும், தோனிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று மனம் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தோனியா..? பாண்டியாவா..?
இதனையடுத்து தனது 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கேப்டன் தோனி சென்னை அணிக்காக 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வாரா அல்லது தோனி, ரோகித்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெறுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும் இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல தீவிரம் காட்டும் என்பதால் முன்கூட்டியே வெற்றியை தீர்மானிப்பது கடினம் என்பதே உண்மை.
அதே வேளையில் இரு அணிகளின் பலம், பலவீனத்தை தாண்டி இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு இயற்கையும் துணை புரிய வேண்டும். ஏனெனில், 2வது குவாலிஃபையர் போட்டியைப் போன்று இன்றும் மழைபெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளின் பிளெயிங் 11 விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, சிவம் துபே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர் & தோனி) ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா,
குஜராத் டைட்டன்ஸ் அணி: விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி பதவியேற்பு!
’தி கேரளா ஸ்டோரி படம் உண்மை கதையா?’: கமல் பளீர் பதில்!