ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ப்ராஸ் கான் தேர்வுசெய்யப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது இந்தியா.
பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் ஆஸ்திரேலியா உடனான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை கண்டிப்பாக கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியலை சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வுக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், கே.எஸ்.பாரத், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சர்ப்ராஸ் கானுக்கு இடமில்லை
இதில் தொடர்ந்து 3 ரஞ்சி போட்டிகளில் மும்பை அணிக்காக சிறப்பாக ஆடிவரும், சர்ப்ராஸ் கான் இடம்பெறவில்லை. ஆனால் அதிரடி வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரஞ்சி போட்டியில் கடைசியாக தான் விளையாடிய 25 இன்னிங்ஸில் 10 சதங்களையும், 5 அரைசதங்களையும் அடித்துள்ளார் சர்ப்ராஸ் கான். இதுபோக இரட்டைச் சதம், முச்சதம் என பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில் தான் அவர் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என அனைவரும் இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்து வருகின்றனர்.
ரஞ்சி கோப்பையை ஏன் நடத்துகிறீர்கள்?
அதன்படி ஒரு ரசிகர் கூறுகையில், ”டெஸ்டில் சர்ப்ராஸ் கானை விடுத்து சூர்யாகுமார் யாதவை தேர்வு செய்திருப்பது ரஞ்சி கோப்பையை அவமதிக்கும் செயலாகும். பின்னர் எதற்காக ரஞ்சி கோப்பையை நடத்துகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு வீரர் இதற்கு மேல் வேறு என்ன செய்வார்?
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சர்ப்ராஸ்கான் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இது நிச்சயம் சர்ப்ராஸ் கான் போன்ற ஒரு வீரருக்கு சோர்வையும், சோகத்தையும் அளிக்கும்.
இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைய சர்ப்ராஸ் கானை விட வேறு யாரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து விட முடியாது. ஒரு வீரர் இதற்கு மேல் வேறு என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பேஷன் ஷோக்களுக்குச் செல்லுங்கள்
இது அனைத்திற்கு மேலாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தேர்வுக்குழு மீது தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சர்ப்ராஸ் கான் தனது சதத்தினை அடித்தும் களத்தில் இருந்து வெளியேறாமல், தொடர்ந்து களத்தில் நின்று ரன்களை குவித்து வருகிறார். அவர் அனைத்து விதத்திலும் கிரிக்கெட்டுக்கு தகுதியானவர் என்பதையே இது காட்டுகிறது.
ஆனால் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. உங்களுக்கு (இந்திய அணி) உடல் மெலிதான வீரர்கள் மட்டுமே தேடுகிறீர்கள் என்றால், முதலில் பேஷன் ஷோக்களுக்குச் செல்லுங்கள், அங்கு சில மாடல்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பேட் மற்றும் பந்தினை கொடுத்து அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு வீரனின் உடலளவை கருத்தில் கொள்ளாமல், அவர் எடுத்த ரன்களையும் விக்கெட்களையும் கருத்தில் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.
அன்று இரவு முழுவதும் அழுதேன்
எனினும் இதுகுறித்து பேசியுள்ள சர்ப்ராஸ் கான், “நானும் மனிதன் தான். எனக்கும் உணர்வுகள் இருக்கிறது. நான் தேர்வு செய்யப்படாத அன்றைய இரவு முழுவதும் உடைந்து அழுதேன்.
பின்னர் தந்தையிடம் பேசினேன். அவர் தான் எனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தார். இப்போது அழுத்தமான அந்த மனநிலையில் இருந்து வெளிவந்துவிட்டேன். இனி எனது ரன் வேட்டையும் அதே வேகத்தில் தொடரும்” என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சிகரெட் பிடிக்கும் காளி : இயக்குநர் கைதுக்கு இடைக்கால தடை!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணைக் குழு அமைப்பு!