இந்திய அணிக்காக 40வயது சுனில் சேத்ரி மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்தியாவின் சாதனை கால்பந்து வீரரும், இந்தியா அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் மத்தியில் இருந்து விடை பெற்றார். பின்னர், ஐ.எஸ்.எல் லீக்கில் பெங்களுரு எப்.சி அணிக்கு மட்டும் விளையாடி வந்தார்.Sunil Chhetri return india team
இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்திய அணி இரு சர்வதேச ஆட்டங்களில் விளையாடுகிறது. மார்ச் 19 ஆம் தேதி மாலத்தீவு அணியுடன் நட்பு ஆட்டத்திலும் மார்ச் 25 ஆம் தேதி 2027 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தகுதி சுற்றில் வங்கதேச அணியுடனும் இந்தியா மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களுமே ஷில்லாங்கில் நடைபெறுகிறது.இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணியில் சுனில் சேத்ரி சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மனாலோ மார்க்கஸ் கூறுகையில், ‘ஆசியக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் கடும் சவால் நிறைந்தது. இது தொடர்பாக சுனில் சேத்ரியிடம் நான் பேசினேன். நீங்கள் இருந்தால் அணி இன்னும் வலுவாக இருக்கும் என்று எடுத்து கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, அணி வீரர்கள் பட்டியலில் சேர்த்தோம் என்கிறார். Sunil Chhetri return india team
இந்திய அணிக்காக சுனில் சேத்ரி 94 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் நான்காவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ 135 கோல்களுடனும் இரண்டாவது இடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி 112 கோல்களுடனும் மூன்றாவது இடத்தில் ஈரான் வீரர் அலி தைய் 108 கோல்களுடனும் உள்ளனர்.
தற்போது, சுனில் சேத்ரிக்கு 40 வயதாகிறது. கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை 40 வயது வரை விளையாடுவதற்கு தனி உடல் தகுதி வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.