Womens T20 WorldCup : ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று (அக்டோபர் 13) இரவு நடைபெற்ற டி20 மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது.
ஐசிசி 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற தனது 4வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. எனினும் அந்த அணியின் நட்சத்திர வீராங்கனைகளான பெத் மூனே(2) மற்றும் ஜார்ஜியா வராஹம்(0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார் இந்திய பவுலர் ரேனுகா சிங்.
எனினும் அதன்பின்னர் கிரேஸ் ஹாரிஸுடன் (40) ஜோடி சேர்ந்த கேப்டன் தஹிலா மெக்ராத்(32) மற்றும் எல்லிஸ் பெர்ரி(32) ஆகியோர் சிறப்பான விளையாடினர். இதனால் அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களான ஷபாலி வர்மா(20), ஸ்மிருதி மந்தனா (6) மற்றும் ஜெர்மியா(16) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் அடுத்ததாக இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஜோடி இந்திய அணியின் வெற்றிக்காக போராடியது. 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் குவித்த நிலையில் தீப்தி சர்மா29 ரன்களின் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒரு புறம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் உறுதியுடன் நின்று அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
எனினும் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மேலும் இந்தத் தொடரில் முதல் அணியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி, 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதே வேளையில் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணியின் அரையிறுதி வாய்ப்பு என்பது இன்று நடைபெற உள்ள பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டியின் முடிவில் உள்ளது.
நியூசிலாந்து வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிப்பெறும், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் பெறும் நிலையில், ரன்ரேட் அடிப்படையில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதனால் ஒட்டுமொத்த இந்திய அணியும் பாகிஸ்தான் வெற்றிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜம்மு காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சி ரத்து!
பிக் பாஸ் சீசன் 8: வீட்டாரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி