அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்!

Published On:

| By Selvam

நேற்று  (செப்டம்பர் 4) நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின், 18-வது ஓவரில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டார். இதனால் அவரை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங், இர்பான் பதான், விராட் கோலி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 4) நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்து இந்தியாவை வீழ்த்தியது.

18-வது ஓவரை இந்திய அணி வீரர் ரவி பிஸ்னாய் வீசினார். அப்போது, ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவற விட்டார். இது ஆட்டத்தின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் அர்ஷ்தீப் சிங் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சமூக வலைதளங்களில் அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளம் விளையாட்டு வீரர் அர்ஷ்திப் சிங்கை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள். வேண்டுமென்று யாரும் கேட்சைத் தவற விட மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். பாகிஸ்தான் அணி வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். மலிவான விமர்சனங்களால் நம் விளையாட்டு வீரர்களை சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆர்ஷ் ஒரு தங்கம்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “அர்ஷ்தீப் சிங் வலுவான ஒரு கிரிக்கெட் வீரர். அப்படியே இரு அர்ஷ்தீப்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அர்ஷ்தீப் சிங் கேட்ச் தவறவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, “யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். ஆட்டத்தின் சூழல் மிகவும் கடினமானதாக இருந்தது. தவறுகளை உணர்ந்து வீரர்கள் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்”  என்று அவர் தெரிவித்திருந்தார்.

செல்வம்