செஸ் போட்டி தொடங்கியது: இந்தியா முதல் வெற்றி!

விளையாட்டு

இன்று (ஜூலை 29) தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்றுமுதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக இதன் தொடக்க விழா நேற்று (ஜூலை 28) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி., மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 29) சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டன. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழகத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.எ. உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைச்சர் அனுராக் தாகுர், சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க சங்கத்தின் தலைவர் ஆர்க்காடி வோர்கோவிச் ஆகியோர் இணைந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், “தமிழக அரசின் உபசரிப்பினால் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட வந்த உலக அளவிலான வீரர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்தான்” என்றார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 29) 3 மணிக்கு தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியா பி அணியில் இடம்பெற்ற ரோனாக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரஹ்மான் முகமதுவை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *