இலங்கை – நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான டி20 உலகக் கோப்பை தொடர் முதல் சுற்று ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன.
மீதமுள்ள 8 அணிகளில் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் ஏ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் நெதர்லாந்து அணியுடன் விளையாடவிருந்த இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
இதனால் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது.
இருப்பினும் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மேக்ஸ் ஓ டவுட் மட்டும் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான அணிகளின் பட்டியலில் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
இதனால் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.
மோனிஷா