ஆசிய கோப்பை: இந்தியாவின் கனவுக்கு கட்டையை போட்ட இலங்கை!

விளையாட்டு

நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இலங்கையுடன் சந்தித்த தோல்வியை தொடர்ந்து இந்தியாவின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து அடுத்து வரும் 2 போட்டிகளிலும் மிகபெரிய அளவில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டி என்பதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டத்தில் இலங்கையை நேற்று எதிர்கொண்டது இந்திய அணி.

மேலும் ஆசிய கோப்பை தொடரில் இதுவரை இலங்கை அணியுடன் மோதிய 7 முறையும் இந்திய அணி தோற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பமே அதிர்ச்சி!

போட்டி நடந்த துபாய் சர்வதேச மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக இந்திய அணி டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

கோலி டக் அவுட்!

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் 2-வது ஓவரில் ராகுல் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். நல்ல பார்மில் இருக்கும் கோலி இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்-அவுட் ஆகி ஏமாற்றினார்.

ரோகித் – சூர்ய குமார் யாதவ் ஜோடி அபாரம்!

இதையடுத்து ரோகித்துடன் சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் சிறப்பாக ஆடியதால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

அபாரமாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ரோகித் – சூர்ய குமார் யாதவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சொதப்பிய மிடில் ஆர்டர்!

ஆனால் சீரான இடைவெளியில் இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டுகளை இழந்ததால் ரன்வேகம் வெகுவாக சரிந்தது. சூர்ய குமார் யாதவ் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா மற்றும் பண்ட் ஆகியோர் 17 ரன்கள், தீபக் ஹூடா 3 ரன்கள் என புவனேஷ்வர் டக் அவுட் என ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. 190 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே எதிரணிக்கு சவால் அளிக்க கூடிய ஆடுகளத்தில் வீரர்கள் சொதப்பியதால் சுமார் 20 ரன்கள் குறைவாக எடுத்தது இந்திய அணி.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் அளித்து அதிரடி காட்டிய இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர்.

நிசங்கா 52 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த அசலங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய குனதிலகா 1 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய மெண்டிஸ் 57 ரன்கள் குவித்தார்.

srilanka stopped indias asia cup

பரபரப்பில் பன்னீர் ஊற்றிய புவனேஷ்வர்!

ஆட்டம் முழுவதும் இலங்கை பக்கம் மட்டுமே வெற்றி காற்று வீசியது. எனினும் கடைசி இரு ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் போட்டியில் பரபரப்பு தொற்றியது.

ஆனால் 19 வது ஓவரை வீசிய அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் 14 ரன்கள் கொடுத்து இலங்கையின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கினார்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசியும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓவர் த்ரோ இலங்கையின் வெற்றியை உறுதி செய்தது.

இதனால் 1 பந்தை மீதம் வைத்து இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜபக்சா 25 ரன்களும், கேப்டன் சனகா 33 ரன்களும் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

வரலாற்றை தக்கவைத்த இலங்கை!

இலங்கையின் வெற்றியை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் ஆசியக்கோப்பையில் இலங்கை அணியிடம் தொடர்ந்து 8 வது முறையாக இந்தியா தோற்றுள்ளது.

அதேவேளையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ள இலங்கை அணி இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *