இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தாமல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டு ள்ளது.
தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும். தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நான்கு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினை, மக்கள் போராட்டம், அரசியல் மாற்றங்கள் என்று நெருக்கடியான சூழல் நிலவுவதால் இந்தப் போட்டி அங்கு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது உறுதியாகவில்லை.
இந்தப் போட்டியைத் திட்டமிட்டப்படி இலங்கையில் நடத்துவதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் இருந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா தற்போது,
“ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” எனத் தெரிவித்துள்ளார்.
-ராஜ்