கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கிரிக்கெட் அணி பல முக்கிய போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்தது. சங்கரகரா காலத்தோடு இலங்கை அணியின் பொற்காலம் முடிந்து போனது என்றே சொல்லலாம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இப்போது நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி தோல்வி அடைந்தாலும், மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
தற்போது, அணியின் இடைக்கால பயிற்சியாளராக அதிரடி மன்னன் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இலங்கை அணியின் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த ஜெயசூர்யா யார் என்று பார்க்கலாம்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இலங்கை அணிக்கு வென்று கொடுத்தவர் ஜெயசூர்யா என்றால் மிகையல்ல. சிறந்த தொடக்க வீரராகவும், ஆல் ரவுண்டராகவும் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.
தற்போது டி 20 போட்டிகளில் அதிரடி காட்டும் வீரர்கள் பலருக்கு ஜெயசூர்யாதான் ஆதர்ஷ நாயகன். ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கி அதிரடி காட்டியவர் முதலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த். அடுத்தது, ஜெயசூர்யாதான்.
1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜெயசூர்யா காட்டிய அதிரடியால்தான் இலங்கை அணி முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜெயசூர்யா சோபிக்காவிட்டாலும், அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை கோப்பையை வெல்ல வைத்தனர்.
ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஒரு உதாரணத்தை கூறலாம். இந்தியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகரின் ஓவரை ஜெயசூர்யா பின்னி எடுத்து விட்டார்.
எப்படி போட்டாலும் பந்து பவுண்டரிக்கும் சிக்சுக்கும் பறக்க ஒரு கட்டத்தில் தான் வேகப்பந்து வீச்சாளர் என்பதையே மறந்து, ஸ்பின் வீசினார் மனோஜ் பிரபாகர். அப்படி, ஒரு ஆட்டத்தை ஆடிக்காட்டியவர்தான் இந்த ஜெயசூர்யா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நடப்பு கல்வியாண்டின் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியானது!