ஆசியக் கோப்பையில் இலங்கை அணி வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
துபாயில் நடைபெற்று வரும் 6 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 1) இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்த வங்கதேச அணி, நேற்றைய போட்டியில் முதலில் பேட் செயதது.
இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெஹிடி ஹாசன் மற்றும் சபீர் ரஹ்மான் களமிறங்கினர்.
சபீர் ரஹ்மான் 5 ரன்களில் வெளியேற, மெஹிடி ஹாசனுடன் கைகோர்த்தார், கேப்டன் ஷகீப்-அல்-ஹசன். இந்த ஜோடி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்க ஆரம்பித்தது.
இருப்பினும், மெஹிடி ஹாசன் 24 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய முஸ்ஃபிக்குர் ரஹீம் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஹொசைன் மற்றும் மஹ்மதுல்லா ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
ஹொசைன் 39 ரன்களிலும், மஹ்மதுல்லா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் மொசாதேக் ஹொசைன் அதிரடி காட்ட வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
மொசாதேக் ஹொசைன் 9 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமிகா கருணாரத்னே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மஹீஷ் தீக்ஷனா, தில்சான் மற்றும் அஷிதா ஃபெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பின்னர், 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில், நிஷாங்கா 20 ரன்கள் எடுத்தார்.
அவருக்குப்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், குஷால் மெண்டிஸ், கேப்டன் ஷனகா ஜோடி சேர்ந்து அருமையாக விளையாடினர்.
மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் தசுன் ஷனகா 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சமிகா கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
பெர்னாண்டோ 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
வங்கதேச அணியின் சார்பாக ஹொசைன் 3 விக்கெட்டுகளும், டஷ்கின் அஹமது 2 விக்கெட்டுகளும் மெஹதி ஹாசன், முஷ்தபிஷூர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
துபாயில் நடைபெற்ற போட்டியில் இலங்கையின் அதிகபட்ச சேஸிங் இதுதான். 60 ரன்கள் எடுத்த குஷால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஜெ.பிரகாஷ்
ஆசிய கோப்பை: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்தியா!