ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசியக்கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) முக்கியமான போட்டி நடைபெற்றது.
மழையால் தாமதம்!
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு பிரமேதாசா மைதானத்தில் மோதின.
ஆனால் தொடக்கத்திலேயே குறுக்கிட்ட மழையால் போட்டி 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி தலா 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடந்து ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், பேட்டிங் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் நீக்கப்பட்டு அப்துல்லா சஃபிக் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜமான் 4 ரன்னில் போல்டாகி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து பாபர் அசாமும் 29 ரன்னில் வெல்லலகே பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.
மீண்டும் குறுக்கிட்ட மழை!
இதற்கிடையே 27.4 ஓவரில் பாகிஸ்தான் அணி 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் ஆட்டம் மீண்டும் மழையால் தடைப்பட்டது.
20 நிமிடத்துக்குப் பின் மீண்டும் போட்டி துவங்கிய போது 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அணியை மீட்ட ரிஸ்வான் – இப்திகார் ஜோடி!
அப்போது 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிஸ்வான் – இப்திகார் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் ஜோடி சேர்ந்து 108 ரன்கள் குவித்த நிலையில் இப்திகார் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கான் 3 ரன்களில் வெளியேறினார்.
எனினும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய ரிஸ்வான் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் மதிஷா பதிரானா 3 விக்கெட்டும், மதுஷன் 2 விக்கெட்டும், தீக்ஷனா மற்றும் வெல்லலகே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சதங்களை தவறவிட்ட ஜோடி!
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர்கள் நிசாங்கா(29) மற்றும் குசால் பெரேரா (17) ஆகியோர் சுமாரான துவக்கம் அளித்தனர்.
எனினும் அடுத்து வந்த குஷால் மெண்டிஸ்(91), சமரவிக்ரமே(48) ஜோடி, அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்ற நிலையில் இப்திகார் பந்துவீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
இலக்கை நெருங்கிய நேரத்தில் அடுத்து வந்த வீரர்களும் தங்களது விக்கெட்டை வந்த வேகத்தில் பறிகொடுத்து பெவிலியன் திரும்ப ஆட்டம் இழுபறியில் சென்றது.
குறிப்பாக ஆட்டத்தின் 41வது ஓவரில் ஷாகின் அப்ரிடி தனது அதிவேக பந்துவீச்சில் இலங்கையின் தனஞ்செயா மற்றும் வெல்லலகே விக்கெட் வீழ்த்தியது ஆட்டத்தில் பரபரப்பான சூழலை உருவாக்கியது.
கடைசி ஓவரில் பதற்றம்!
கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், முதல் 4 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து பிரமோத் விக்கெட்டை பறிகொடுத்தது இலங்கை அணி.
இதனால் கடைசி இரு பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய சூழல் எற்பட்டது.
எனினும் 5வது பந்தில் பவுண்டரி விரட்டிய அசலங்கா, கடைசி பந்தில் 2 ரன் அடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற உதவினார்.
இதன்மூலம் ஆசியக்கோப்பை தொடரில் 12வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இலங்கை அணி. வரும் 17ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ள பைனலில் இந்திய அணியுடன் மோதுகிறது
அதே நேரத்தில் கடைசி வரை போராடிய பாகிஸ்தான் அணி சோகத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது. போட்டியின் முடிவில் அந்த அணி வீரர்கள் கண் கலங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: மத்திய பல்கலைக்கழகத்தில் பணி!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!