ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி.
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 18) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 11 ரன்கள் மற்றும் ராகுல் திரிபாதி 15 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் – ஹென்றிச் க்ளாஸென் ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.
அதிரடியாக விளையாடிய க்ளாஸென் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் வேகமாக செயல்படாத மார்க்ரம் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டி பெங்களூரு பவுலர்களை பந்தாடி வந்த க்ளாசென் 8 பவுண்டரி 6 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்து தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் ஹரி ப்ரூக் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் 2 விக்கெட்கள் எடுத்தார்.
தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது பெங்களூரு.
நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஹைதராபாத் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர்.
முதலாவதாக அரை சதமடித்த விராட் கோலி வழக்கம் போல 50 ரன்கள் கடந்ததும் இரு மடங்கு வேகத்தில் அதிரடியாக விளையாடி 171 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட டு பிளேஸிஸ் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 71 ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் மேக்ஸ்வெல் 5 ரன்கள், பிரஸ்வெல் 4 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில் பெங்களூரு அணி 19.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் மும்பையை முந்திக் கொண்டு 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹைதராபாத் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்தால் சென்னை மற்றும் லக்னோ அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கும். அதே போல மும்பை அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பும் அதிகரித்திருக்கும்.
ஆனால், நேற்றைய லீக் ஆட்டத்தில் தோற்றால் வெளியேற வேண்டும் என்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் மாஸ் காட்டிய விராட் – டு பிளேஸிஸ் ஜோடி பெங்களூரு அணியை அற்புதமாக வெற்றி பெற செய்தனர். மேலும் மே 21 ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கள் சென்று விடலாம் என்ற நிலைக்கும் பெங்களூரு அணி முன்னேறியுள்ளது.
அதனால் சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கும் காத்திருப்புக்கும் தள்ளப்பட்டுள்ளன.
மோனிஷா
39 பேருடன் மூழ்கிய சீனப் படகு: மீட்புப்பணியில் இந்தியா!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!