ஸ்குவாஷ் உலக கோப்பை நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கடந்த மே 13 ஆம் தேதி சென்னையில் தொடங்கிய உலகக் கோப்பை ஸ்குவாஷின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் மலேசியா அணியை தோற்கடித்து எகிப்து அணி சாம்பியனானது.
சென்னை, நுங்கம்பாக்கம், தாஜ் கோரமன்டல் ஹோட்டலில் இன்று மாலை சர்வதேச ஸ்குவாஷ் போட்டி-2023 நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஸ்குவாஷ் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களையும், பரிசுத் தொகைகளையும் வழங்கினார்.
பின்னர் பேசிய முதல்வர், “கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடந்ததன் மூலமாக தமிழ்நாடு உலக புகழை அடைந்தது.
செஸ் ஒலிம்பியாட் அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்றதே இல்லை. முதன்முதலாக தமிழ்நாட்டில் நடந்தது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்டமிட்ட உடனேயே அதற்காக 102 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும் என்பார்கள். ஆனால் 4 மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது. உலகமே வியக்கக்கூடிய அளவிற்கு போட்டியை நாம் நடத்தி காட்டினோம்.
அந்த வகையில் இந்த ஸ்குவாஷ் உலக கோப்பை அரசு ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இது போன்ற போட்டிகளை தனிப்பட்ட சம்மேளனங்கள் நடத்தும் போட்டிகளாக அல்லாமல் அரசு நடத்தும் போட்டிகளை போலவே உதவிகளை செய்து வருகிறார்.
விளையாட்டுத் துறை கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. அவருக்கும் அவரது துறையை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற 4 வீரர்களில் 3 பேர் தமிழர்கள்.
அவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அகடாமியில் ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்தால் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் பெருமைக்குரிய ஒன்று.
தமிழ்நாடு தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களில் 80 நபர்களை கொண்டு வலம் பெற்றுள்ளது. நமது மாநிலத்தில் ஸ்குவாஷ் துறையில் 5 அர்ஜுனா விருதுகளும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களும் இருக்கின்றனர்.
நம் மாநிலத்தின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்களான ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷல் மற்றும் அபே சிங் ஆகியோர் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பவர்களாக உள்ளனர்.
துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும், விளையாட்டில் சிறந்து விளங்கக்கூடியவர்களை ஊக்குவிக்க நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டியும் நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா 2023 போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டு உள்கட்டமைப்பில் தமிழ்நாடு அரசு அதிநவீன வசதிகளை உருவாக்கி வருகிறது. விளையாட்டு வீரர்களே வீராங்கனைகளே வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு விளையாடுங்கள்.
நீங்கள் அடையும் வெற்றி என்பது நீங்கள் பிறந்த நாடு, சார்ந்த நாடு அடையும் வெற்றி. எனவே உங்களது கடமை, திறமை, பொறுப்பும் பெரியது” என்று பாராட்டுகளை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
மோனிஷா
விஜயின் ’தேர்தல்’ பேச்சு: அரசியல் புள்ளிகள் ரியாக்ஷன்!
பாஜக நிர்வாகி கைது: நிர்மலா சீதாராமன் vs சு.வெங்கடேசன்