டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 13 ரன்களே மீதமிருந்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை கலைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
9 ஓவர் போட்டி!
அதன்படி குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று ஹோபர்ட்டில் உள்ள பெல்லிவர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதன்படி ஜிம்பாவே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சகாப்வா (8)மற்றும் எர்வின்(2) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

அதனை தொடர்ந்து வந்த சீன் வில்லியம்ஸ்(1) மற்றும் ராஸாவும்(10) ஏமாற்றம் அளித்தனர்.
எனினும் மாதெவர்(35) மற்றும் சும்பா(18) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தில் ஜிம்பாவே அணி 9 ஓவர் முடிவில் 79 ரன்கள் அடித்தது.
டி காக் அதிரடி!
இதற்கிடையே மழை குறுக்கீடு இருந்ததால் டி.எல்.எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு 7 ஓவரில் 64 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அதிரடியாக ஆட்டத்தை துவக்கினார் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான குயிண்டன் டி காக்.
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 4 பவுண்டரிகள், 1 சிக்ஸ் பறக்க விட்ட டி காக், 2வது ஓவரில் அதிரடியாக 4 பவுண்டரிகள் பறக்கவிட்டார்.
3வது ஓவரில் கேப்டன் பவுமாவும், டி காக்கும் சேர்ந்து 11 ரன்கள் அடித்தனர். இதனால் 3 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 51 ரன்களை குவித்து விட்டது.

மேலும் 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில் மீண்டும் பெரும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி முடிவில்லாமல் முடிக்கப்பட்டதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவை துரத்தும் துரதிர்ஷ்டம்!
4 ஓவர் மீதமிருக்க 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு மழை எமனாக வந்துவிட்டது.
இதனால் இரண்டு புள்ளிகள் கிடைக்க வேண்டிய இடத்தில் ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளதாக சோகத்தில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி.

ஐசிசி நடத்து உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தென்னாப்பிரிக்க அணிக்கு இதுபோன்ற துரதிர்ஷ்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் அந்த அணியின் ரசிகர்கள்!
கிறிஸ்டோபர் ஜெமா
இங்கிலாந்தின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!
இரட்டை குழந்தைகளுடன் தல தீபாவளி கொண்டாடிய விக்கி – நயன்தாரா!