தெற்காசிய கால்பந்து : வரலாறு படைத்த இந்திய அணி!
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று (ஜூலை 4) இரவு நடந்த இறுதி போட்டியில் இந்திய அணியும் குவைத் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிபடுத்தினர்.
போட்டியின் 14வது நிமிடத்தில் குவைத் வீரர் முதல் கோலை அடித்தார். இதனை அடுத்து இந்திய அணி முதல் பாதியில் 39 வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தது.
இதனை அடுத்து போட்டி முழுவதுமே இரு அணி வீரர்களும் கோல் போட முடியாமல் தடுமாறினர்.
90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரு அணியும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தன.
அதன் பிறகு இரு அணிக்கும் கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. அப்போதும் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனை அடுத்து போட்டி சமனில் முடிவடைந்தது.
பின்னர், வெற்றியாளர்களை தீர்மானிக்க பயன்படுத்தப்பட்ட பெனால்டி சூட் அவுட் முறையில் இந்தியா 5 – 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குவைத் அணியை வீழ்த்தி 9 வது தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய அணி வென்றது.
முன்னதாக, 1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: தக்காளி அடை!