நடப்பு ஆண்டின் உலக கோப்பை டி 20 போட்டிகள் அக்டோபர் 16 ல் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
சூப்பர் 12 சுற்றுகள் ஆட்டத்தின் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்து அரையிறுதி, இறுதிப்போட்டிகள் மீது தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஆட்டத்தில் பல்வேறு எதிர்பாராத சுவாரஸ்யமான விசயங்களும் நடந்தேறியிருக்கின்றன.
அந்த வகையில் பார்க்கும் போது இந்த ஆண்டு எந்த அணியின் வெற்றி ஆச்சரியமாகவும், யாருடைய தோல்வி அதிர்ச்சியாகவும் இருந்தது என்றால் அது தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி தான்.

நவம்பர் 6 ஆம் தேதி போட்டியாக இருந்தாலும்; நவம்பர் 7ம் தேதி இன்று பேசுவதற்குக் காரணம் அரையிறுதியில் நிச்சயம் வரும் என்று எதிர்பார்த்த தென்னாப்பிரிக்க அணி, சூப்பர் 12 சுற்றுக்குள் சுருண்டு போனதால் தான்.
இந்த போட்டியானது இந்திய நேரப்படி நேற்று காலை 5.30 மணிக்கு துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
தூள் கிளப்பிய நெதர்லாந்து
உலகக்கோப்பையில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்கள் கொண்ட அணியாக இருக்கும் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களை அதிரடியாய் ஆட விட்டு வேடிக்கைப் பார்த்தது. அங்கேயே அந்த அணியின் சொதப்பல் ஆரம்பமாகிவிட்டது.

முதலில் களமிறங்கிய மைபர்க் 30 பந்துகளில் 35 ரன்கள் , மேக்ஸ் ஓடோவ்ட் 31 பந்துகளில் 29 ரன்கள் , டாம் கூப்பர் 19 பந்துகளில் 35 ரன்கள், அடுத்து ஆடிய அக்கர்மான் அதிரடியாய் 26 பந்துகளில் 41 ரன்கள் என சரவெடி பட்டாசாய் சீறினார்கள் நெதர்லாந்து வீரர்கள்.
ஆக ஃபீல்டிங்கில் தென் ஆப்பிரிக்க அணி கோட்டை விட்டதும், விக்கெட் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது போல் ஆடியதே தவறு தான்.
வியூகத்தில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா
மேலும் இந்த ஆட்டத்தில் கேசவ் மஹாராஜ் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை பெறவில்லை என்றால் ஆட்டம் இன்னும் மோசமாய் மாறியிருக்கும்.

அதன் பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அவ்வளவாக நின்று ஆட முடியாத வகையில் வியூகம் வகுத்திருந்தனர் நெதர்லாந்து அணி.
பந்துவீச்சில் வேகம் காட்டி, பந்து மைதானத்தில் எங்கு ஓடினாலும் அதை தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஃபீல்டிங் செட் செய்திருந்தனர்.
இதனால் திணறிய தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரூசோ 25 ரன்களும், கிளாசின் 21 ரன்களும் அடித்தனர்.
கடைசியில் 20 ஓவர் முடிவில் 145 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா.

சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிக்கா!
நடப்பு டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்த போட்டிக்கு முன்னதாக 4 ஆட்டங்களில் இந்தியா, பங்களாதேஷ் என்று இரண்டு அணிகளை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றிருந்தது தென்னாப்பிரிக்கா.
வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்த நேரத்தில் எமனாய் வந்த மழையால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோல்வி என்றாலும் நல்ல பார்மில் ரன்ரேட்டில் உயர்ந்து நின்றது தென்னாப்பிரிக்கா. எனவே நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கே உரித்த விதியாக நெதர்லாந்து அணிக்கு எதிரான தோல்வி அந்த அணியை வழக்கம்போல உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
கை கூடாத கனவு!
ஏனெனில் இதுவரை ஐசிசி நடத்தியுள்ள அனைத்து வகையான உலகக்கோப்பையையும் தொட்டுப்பார்க்காத முன்னணி அணியாக தென்னாப்பிரிக்கா உள்ளது.

டி20 உலகக்கோப்பையில் 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அரையிறுதிக்கு சென்றதே தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச சாதனையாகும்.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் வெளியேறி உள்ளதன் மூலம் இந்த முறையும் உலகக்கோப்பை வெல்லப்போகும் அணியை வேடிக்கை பார்க்க போகும் அணியாகவே தென்னாப்பிரிக்கா மாறியுள்ளது.
இதனால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதோடு, எப்போது உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா கையில் ஏந்தும் என்று ஏக்கத்தோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.
பவித்ரா பாலசுப்ரமணியன்