டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ரிலீ ரூசோவ் டி20 தொடரின் முதல் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இன்று (அக்டோபர் 27) சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா- வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
ரூசோவ் முதல் சதம்
இதில் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் தொடரின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பையின் 10வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய ரூசோவ் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
ரூசோவிற்கு அடுத்து, தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிகப்படியாக 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிரடியாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
வங்கதேச வீரர்கள் சொதப்பல்
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய நஜ்முல் ஹுசேன் 9 ரன்னிலும், சவுமியா சர்கார் 15 ரன்களிலும் வெளியேறினர்.
கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் வங்கதேச அணி 16.3 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நோர்க்கியா 4 விக்கெட்டையும், ஷம்சி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
மோனிஷா
“என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டியது அண்ணாமலையை தான்” – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!
கேசிஆர் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குதிரை பேரம்: சிக்கிய கோடிகள்!