நெதர்லாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இன்றைய (நவம்பர் 6) ஆட்டத்தில் நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி இன்று வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
சூப்பர் 12 சுற்றில் அனைத்து அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
குரூப் 1 பிரிவு போட்டிகள் நேற்று (நவம்பர் 5) நிறைவு பெற்றன. அதில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் தற்போது இடம்பெற்றுள்ளன.
இன்று குரூப் 2 பிரிவில் உள்ள 6 அணிகளில் அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நெதர்லாந்து – தென்னாப்ரிக்கா அணியிடையேயான முதல் போட்டி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மைபர்க் மற்றும் மேக்ஸ் ஓடோவ்ட் நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
அதிரடியாக விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.தென்னாப்பிரிக்கா அணி இறுதி வரை போராடி 20 ஓவர் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிகா அணியின் தோல்வியால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
2 புள்ளிகளுடன் 6-வது (கடைசி) இடத்தில் இருந்த நெதர்லாந்து அணிக்கு இந்த வெற்றி பயனளிக்கவில்லை.
4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.
அதாவது இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல முடியும்.
4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள பங்களாதேஷ் அணிக்கும் பாகிஸ்தான் அணியின் நிலைதான்.
அரையிறுதிக்குள் இரண்டாவதாக நுழையவிருக்கும் அணி யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மோனிஷா
பாலியல் குற்றச்சாட்டு : நள்ளிரவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!