பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று (டிசம்பர் 29) வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, WTC இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இதில் தகுதி பெறுவதற்கு முதல் மூன்று இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் வென்றால் கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.
அதே வேளையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு என்ற நிலைமை இருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 301 ரன்கள் குவித்து 90 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தென்னாப்பிரிக்காவுக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டஃப் கொடுத்த பாகிஸ்தான்!
இந்த நிலையில் வெற்றி பெற வேண்டும் இலக்குடன் 4வது நாளான இன்று (டிசம்பர் 29) களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு பாகிஸ்தான் அணி தனது பந்துவீச்சின் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணி 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாற பாகிஸ்தான் வெற்றியை நோக்கி நகர்ந்தது.

எனினும் கடைசி நேரத்தில் மார்கோ ஜான்சேன்(16) மற்றும் ரபடாவின் (31) கூட்டணி பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தது.
இருவரும் 51 ரன்கள் கூட்டாக சேர்த்த நிலையில், 150 ரன்கள் இலக்கை ரபடாவின் பவுண்டரியுடன் எட்டிய தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றது.

இந்தியாவுக்கு வாய்ப்பு எப்படி?
இந்த நிலையில் இந்தியா மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்ல கடைசி ஒரு வாய்ப்பு உள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
மேலும் அடுத்த மாதம் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைய வேண்டும்.
இந்த இரண்டும் நடந்தால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்று இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதில் ஒரு போட்டி டிராவில் முடிந்தாலும், ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதி பெறும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அன்புமணியை தலைவர் ஆக்கியது ஏன்? : ராமதாஸ் தன்னிடம் கூறியதை பகிர்ந்த சீமான்
தென் கொரியாவின் 2வது பெரிய விமான விபத்து : பலி எண்ணிக்கை 174 ஆக உயர்வு!