SA vs NED: இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் புதிய சுவாரஸ்யங்களை சந்தித்து வருகிறது.
அந்த வகையில், தர்மசாலாவில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்ற 15வது லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட நெதர்லாந்து அணி, அந்த அணிக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசாக அளித்துள்ளது.
முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டி துவங்கும் முன்பே மழை குறுக்கிட்டதால், ஆட்டத்தின் ஓவர்கள் எண்ணிக்கை 43 ஆக குறைக்கப்பட்டது.
‘வாள் தூக்கி நின்னான் பாரு..’
ககிஸோ ரபாடா – லுங்கி நெகிடி – மார்கோ ஜான்சன் – ஜெரால்ட் கோட்சீ என ஒரு கடுமையான வேகப் பந்துவீச்சு தாக்குதலை கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா, மிக கடுமையாக நெதர்லாந்தை தாக்கியது.
அவர்களின் வேகத்தில் துவக்க ஆட்டக்காரர்கள் விக்ரம்ஜீத் சிங் 2 ரன்களுக்கும், மேக்ஸ் ஓ’டவுட் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான காலின் அக்கர்மென் 13 ரன்களுக்கும், பாஸ் டி லீட் 2 ரன்களுக்கும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து, சைபிராண்ட் எங்கெல்பிரெச் 19 ரன்களுக்கும், தேஜா நிதமனுரு 20 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.\
கர்ணன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்ல..’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை சமாளிக்க தனது வாளுடன் 7வது வீரராக காலத்திற்குள் நுழைந்தார் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ். ஒற்றை ஆளாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை திணறடித்த எட்வர்ட்ஸ், மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். இவரது பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரி நோக்கி ஓட, கடைசி வரை அட்டமிழக்காமல் எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்திருந்தார்.
இவருடன், 10வதாக களமிறங்கிய ஆர்யன் தட், அந்த மின்னலை போலவே வெறும் 9 பந்துகளில் 23 ரன்களை விளாசினார். இதன்மூலம், நெதர்லாந்து 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களை சேர்த்தது. ககிஸோ ரபாடா, லுங்கி நெகிடி, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
நெதர்லாந்து நிகழ்த்திய எதிர் தாக்குதல்..
246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, டெம்பா பவுமா மற்றும் குவிண்டன் டி காக் ஒரு நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால், இது பதில் தாக்குதலுக்கான நேரம், நெதர்லாந்து அணியின் பதில் தாக்குதலுக்கான நேரம்.
அந்த தாக்குதல் 9வது ஓவரில் துவங்கியது. டி காக் 20 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின் அவர்களின் தாக்குதல் ஆக்ரோஷமானதாக இருந்தது. போட்டியில் 12வது ஓவர் முடிவதற்குள்ளேயே 4 விக்கெட்களை இழந்தது தென் ஆப்பிரிக்கா.
பின் களமிறங்கிய ஹெய்ன்ரிச் கிளாஸன் மற்றும் டேவிட் மில்லர், தங்கள் அணியின் கோட்டையை சிறிது நேரம் பாதுகாத்தனர். அனால், நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு அவர்களின் தடுப்பையும் தகர்த்தது. கிளாஸன் 28 ரன்களுக்கும், மில்லர் 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து கேஷவ் மகாராஜா மட்டும் 40 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளிக்க, மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால், தென் ஆப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், 38 ரன்கள் வித்தியாசத்தில், இந்த தொடரில் தனது முதல் வெற்றியை நெதர்லாந்து பதிவு செய்துள்ளது. கர்ணனாக தனது அணியை காத்த ஸ்காட் எட்வர்ட்ஸ், இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
முன்னதாக, தனது முதல் 2 போட்டிகளில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்கா வீழ்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது, நெதர்லாந்து அணியின் இந்த வெற்றி, இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையை மேலும் சுவாரஸ்யமாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்த டி.இமானின் முன்னாள் மனைவி!
சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்கும் ரஷ்ய அதிபர் புதின்: காரணம் என்ன?