ODI World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில், தொடரின் துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டி வரும் தென் ஆப்ரிக்கா அணியும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் நேற்று (அக்டோபர் 22) மோதிக்கொண்டன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்ட இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோரை அணிக்குள் கொண்டுவந்தது.
உடல்நிலை காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ் களமிறங்கினார்.
தென் ஆப்ரிக்கா மிரட்டல்!
ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்து, குவின்டன் டி காக் அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் ராசி வேன் டர் டூஷன் இணை, 2வது விக்கெட்டிற்கு 121 ரன்கள் சேர்த்து அசத்தியது. ரீசா ஹென்றிக்ஸ் 85 ரன்களுக்கும், வேன் டர் டூஷன் 60 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் இந்த பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்து 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பின் டேவிட் மில்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் மார்கோ ஜான்சன் வேறு மாதிரியான ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்தினர். 4 சிக்ஸ், 12 பவுண்டரிகளுடன், கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மறுமுனையில், 6 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் கடைசி வரை அட்டமிழக்காமல் ஜான்சன் 75 (42) ரன்கள் குவிக்க, தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் சேர்த்தது.
தடுமாறிய நடப்பு சாம்பியன்!
400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த வண்ணம் இருந்தது.
துவக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களுக்கும், டேவிட் மலான் 6 ரன்களுக்கும் வெளியேறினர். அடுத்து வந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, இங்கிலாந்து 38 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்களை பறிகொடுக்க, இங்கிலாந்து 100-8 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
பின், 9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வுட் அதிரடியாக விளையாடி, அந்த விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்தபோதும், அது இங்கிலாந்து அணிக்கு எந்த பயனையும் சேர்க்கவில்லை.
இறுதியில், 22 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்த இங்கிலாந்து, 170 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதன்மூலம், 229 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா, புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் தொடர்கிறது. இங்கிலாந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்போட்டியில்,தென் அப்பிரிக்காவுக்காக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், சிட்னியில் நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்தை 257 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியிருந்தது.
அதனைத்தொடர்ந்து 2019 ஆண்டு பட்டம் வென்று நடப்பு சாம்பியனாக வலம் வந்த இங்கிலாந்தை மீண்டும் 229 என்ற மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது தென் ஆப்பிரிக்கா.
தனது அபார சதத்திற்காக, ஹெய்ன்ரிச் கிளாசன் இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய உத்தரவு!
குங்குமப் பூவை சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது எவ்வளவு உண்மை?