3வது டி20: ரோசாவ்வின் ஆக்ரோசமான சதம்… தோல்வியை தழுவிய இந்தியா!

விளையாட்டு

இந்தூரில் நேற்று (அக்டோபர் 4) நடந்த இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சொதப்பிய கேப்டன்… அதிரடி காட்டிய ரோசோவ்!

அதன்படி முதல் ஓவரை தீபக் சகார் வீச, நிதானமாக ஆட்டத்தை துவங்கியது தென்னாப்பிரிக்க அணி. இந்தியாவுக்கு எதிரான முதல் 2 போட்டியிலும் டக் அவுட்டான கேப்டன் பவுமா இந்த போட்டியில் தான் முதன்முறையாக 3 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

எனினும் அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 43 பந்துகளில் 68 ரன்களும், ரோசோவ் 48 பந்துகளில் சதமும் அடித்து தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை 200ஐ தாண்ட செய்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது.

இந்திய வீரர்கள் திணறல்!

அதனை தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. கே.எல் ராகுலுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது ஓவரில் 1 ரன்னில் ஆட்டமிழந்ததால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போதைய இந்திய அணியின் ஃபினிஷராக கருதப்படும் தினேஷ் கார்த்திக் முதன்முறையாக 3வது ஓவரில் களமிறங்கினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் இருவரும் அதிரடியாகவே விளையாடினர்.

இதனால் ரிஷப் பண்ட் 27 ரன்களிலும், அரை சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தீபர் சஹார் தவிர அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடரை கைப்பற்றியது இந்தியா!

இதனால் தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் ஏற்கெனவே முதல் 2 போட்டிகளை வென்ற இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கிறிஸ்டோபர் ஜெமா

சரவெடி சதம் அடித்த கவுர்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *