2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில், விளையாடும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியம் என்ற கட்டத்தில், தொடரின் 32வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.
5 போட்டிகளில் அபார வெற்றி, 10 புள்ளிகள், 2வது இடம் என தென்னாப்பிரிக்கா வலுவான நிலையில் இருந்தது. மறுமுனையில் 2 தொடர் தோல்விகள், அரையிறுதிக்கு இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியம் என்ற நிலையில் நியூசிலாந்து களமிறங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின், தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா நிதானமாகவே ஆட்டத்தை துவங்கினர்.
பவுமா 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ராசி வேன் டர் டுஷனுடன் ஜோடி சேர்ந்த டி காக், 2வது விக்கெட்டிற்கு 200 ரன்கள் என்ற அபார பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
டி காக் 114 ரன்களுக்கும், வேன் டர் டுஷன் 133 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் சேர்த்தது.
358 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
முதல் 10 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தாலும், தேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா என அதன் 2 ஆஸ்தான பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை நியூசிலாந்து இழந்தது.
வில் யங் மற்றும் டெரில் மிட்சல் மட்டும் முறையே 33 மற்றும் 24 ரன்கள் சேர்க்க, அடுத்து வந்தவர்கள், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஒற்றை இலக்கத்தில் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
கிளென் பிலிப்ஸ் மட்டும் கடைசி வரை போராடி நின்று 60 ரன்கள் சேர்த்திருக்க, நியூசிலாந்து அணி 167 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம், இந்த உலககோப்பை தொடரில் 190 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார வெற்றியை தென்னாப்பிரிக்கா பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை தொடர்களில் 24 ஆண்டுகளுக்கு பிறகு, நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா முதன்முறையாக வீழ்த்தியுள்ளது.
மேலும், இந்த அபார வெற்றியால் 12 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்!
மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!
ரூ.5.60 கோடி செலவிட்ட விசாரணை ஆணையம்: அரசின் நடவடிக்கை எப்போது?