சுருண்டது ஆஸ்திரேலியா… தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!

Published On:

| By christopher

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்தமண்ணிலேயே வைட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.

தொடந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜோகன்பர்க்கில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது.

அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 93 ரன்கள் விளாசினர். அவருக்கு உறுதுணையாக மில்லர் 63 ரன்களுடன் அரைசதமும், ஜேன்சன் 47 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே பல்வேறு தடுமாறிய நிலையில் 34.1 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம்  122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ்(71) மற்றும் லபுசனே(44) ஆகியோர் அணியை மீட்க போராடிய போதும், மற்ற வீரர்கள் சொதப்பியது அந்த அணியின் தோல்வியை உறுதி செய்தது.

அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தரப்பில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் (5 விக்கெட்டுகள்) கலக்கிய மார்கோ ஜேன்சன் ஆட்டநாயகன் விருதையும், ஏய்டன் மார்க்ரம் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

தொடரின் துவக்கத்தில் 2-0 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி, அடுத்தடுத்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

ராமநாதபுரம் கடற்கரையில் மனித மண்டை ஓடுகள்: அச்சத்தில் மீனவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel