இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 தொடர் போட்டியின் இடையில் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் சிறிது நேரத்திற்கு ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
2 ஆவது போட்டி இன்று (அக்டோபர் 2) அசாம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணி முதல் 7 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் 8வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் பந்து வீசத் தயாராக இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மைதானத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததை வீரர்கள் பார்த்துள்ளனர். பாம்பை பார்த்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த வீரர்கள் பயந்து ஓடினார்கள். இது குறித்து நடுவரிடம் தகவலையும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விரைந்து வந்து பாம்பைப் பிடித்துக் கொண்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் தடைப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கியது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 10 ஓவர் இறுதியில் 1 விக்கெட் இழப்பில் 96 ரன்கள் எடுத்திருந்தது.
மோனிஷா
சென்னையில் மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!
தென் ஆப்பிர்க்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு!