’ட்ரோல் மெட்டீரியல்’ மந்தனா?: மீண்டும் புஸ்வானமான ஆர்.சி.பியின் கனவு!

விளையாட்டு

உலகமெங்கும் கிரிக்கெட்டில் ஆடவர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் பெண்களுக்கான முதல் கிரிக்கெட் தொடர் கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ’மகளிர் கிரிக்கெட் சூப்பர் லீக்’ (WCSL) என்ற பெயரில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் அந்த தொடர் 2019ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆடவருக்கான ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் மகளிருக்கான ஐபிஎல் தொடரும் நடத்தலாமே என்று முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைகளும், ரசிகர்களும் கடந்த சில ஆண்டுகளாக கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் தொடருக்கு இந்தாண்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம்(பிசிசிஐ) ஏற்பாடு செய்தது.

இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. இந்த தொடருக்காக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் உலகம் முழுவதும் இருந்தும் 409 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் அதிகபட்சமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

தற்போதுள்ள இந்திய மகளிர் அணியில் தனது அற்புதமான ஆட்டத்தால் பல்வேறு சாதனைகளை தன் கைவசம் வைத்திருக்கும் மந்தனாவின் வருகை உண்மையில் பெங்களூர் அணிக்கு பெரும் பலமாக கருதப்பட்டது.

மேலும் ஆடவர் ஐபிஎல் தொடரில் கடந்த 15 ஆண்டுகளாக கோப்பையை தங்களது கைகளில் ஏந்த முடியாமல் முட்டி மோதி போராடி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ’ஈ சாலா கப் நம்தே’ என்ற கோஷத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆர்.சி.பி அணி ஆக்ரோசமாக தொடரை துவங்கும். ஆனால் தொடரின் கடைசியில் அதுவே ட்ரோல் மெட்டீரியலாக உருமாறி அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும்.

இந்நிலையில் தான் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு தலைமையேற்ற ஸ்மிருதி மந்தனாவின் வருகை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. குறிப்பாக ஆர்.சி.பி ரசிகர்கள் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் துவண்டு போயிருக்கும் தங்களுக்கு அதை கைப்பற்றி கொடுக்கவந்த தேவதை என்றே மந்தனாவை கருதினர்.

இந்த பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே மகளிர் ப்ரீமியர் லீக் முதல் சீசன் கடந்த மார்ச் 4ம் தேதி நவி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ஆரம்பம் முதலே போட்டி போட்டு தங்களது வெற்றியை பதிவு செய்தன.

அதன்படி டெல்லியும், மும்பையும் நடைபெற்ற 8 லீக் ஆட்டங்களில் தலா 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. உ.பி வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் நிலைமை இந்த தொடரில் படுமோசமாக அமைந்தது தான் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

டெல்லி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஆர்.சி.பி மகளிர் அணி, முதலில் விளையாடிய 5 போட்டிகளிலும் படுமோசமாக தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ஒரு புள்ளிக்கூட பெறாமல் தடுமாறியதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் கடைசி கட்டத்தில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று லீக் போட்டிகள் முடிவில் 4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது ஆர்.சி.பி மகளிர் அணி.

பெங்களூரு அணியின் இந்த நிலைமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருந்தாலும் இந்த சீசன் ஏலத்தில் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஸ்மிருதி தனது பலமான பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் பிரகாசிக்க முடியவில்லை என்பதே முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக முதல் ஆறு போட்டிகளிலும் சேர்த்து ஸ்மிருதி மந்தனாவால் 100 ரன்கள் கூட தாண்ட முடியவில்லை. அவர் தனது முதல் ஆறு போட்டிகளில் 35, 23, 18, 4, 8, 0 என்று
14.6 சராசரி மற்றும் 112 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆறு இன்னிங்சில் மூன்று முறை, ஸ்மிருதியால் இரட்டை இலக்கங்களை கூட எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைசி இரு ஆட்டங்களில் 37, 24 ரன்கள் அடித்ததன் மூலம் மகளிர் முதல் சீசனில் 18.62 சராசரியுடன் மொத்தமாக 149 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனையடுத்து அவர் இந்த தொடரில் அடித்த 1 ரன்னுக்கு 2 லட்சம் சம்பளமா என்று ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் மந்தனா.

முக்கியத்துவம் வாய்ந்த முதல் சீசனில் தனது மோசமான ஃபார்ம் குறித்து அவர் பேசுகையில், ”இந்த சீசன் நாங்கள் நினைத்தது போல் அமையாவிட்டாலும், மகளிருக்கான முதல் சீசன் என்பதால் என் மனதிற்கு நெருக்கமான தொடராக மாறியுள்ளது. நாங்கள் அடுத்த தொடரில் வலுவாக மீண்டு வருவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி 26ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ளது. 2ம் இடம்பெற்ற மும்பை இந்தியன் மகளிர் அணியும், 3வது இடம்பெற்ற உபி வாரியர்ஸ் அணியும் நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணியே கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடும்.

இந்த மூன்று அணிகளில் மகளிர் பிரிமீயர் லீக்கின் முதல் சீசனில் கோப்பையை வென்று வரலாற்றில் இடம்பெற போகும் அணி எது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன்மூலம் அபார திறமையுள்ள ஒற்றை வீரரைத் தாண்டி, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று மூன்றிலும் சிறப்பாக செயல்படும் சிறந்த அணியே கோப்பைக்கு தகுதியான அணி என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

“என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை”: பிரியங்கா

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *