இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை இலவசமாகப் பார்க்கலாம் என்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆசிய கோப்பை செப்டம்பரிலும், ஐசிசி உலகக் கோப்பை தொடர் அக்டோபரிலும் தொடங்க உள்ளது. இந்த இரண்டு கிரிக்கெட் தொடரின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
இந்த இரண்டு தொடரின் போட்டிகளையும் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு இலவசமாக ஒளிபரப்ப டிஸ்னி + ஹாட்ஸ்டார் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தலைவர் சஜித் சிவாநந்தன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி துறையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் முன்னிலையில் உள்ளது. பார்வையாளர்களின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக நாங்கள் அறிமுகப்படுத்திய பல்வேறு அம்சங்கள் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளது.
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பையை இலவசமாகப் பார்வையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கும் நல்ல அனுபவத்தைக் கொடுக்க முடியும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் அனைவருக்கும் இலவசமாக ஒளிப்பரப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் போது ஜியோ சினிமாவிற்கு பார்வையாளர்கள் அதிகரித்தனர்.
இந்நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பையை பயனாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
செயற்கையான மின் தட்டுப்பாட்டை அரசே ஏற்படுத்துகிறதா? : எடப்பாடி
பாம்பு கடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!