கடந்த அக்டோபர் 5 அன்று, இங்கிலாந்து vs நியூசிலாந்து ஆட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், கடந்த நவம்பர் 19 அன்று நிறைவு பெற்றது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதிக்கொண்ட நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை வரலாற்றில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த போட்டியில், தனது அபார சதத்தின் மூலம், ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில், இந்த தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 3 சதங்களுடன் 765 ரன்கள் குவித்து, சாதனைகள் பல படைத்த விராட் கோலிக்கு ‘தொடர் நாயகன்’ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த 2023 ஒருநாள் உலககோப்பை தொடரில், அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் அடங்கிய கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று(நவம்பர் 20) அறிவித்துள்ளது. அந்த அணியில் 6 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஐசிசியின் 2023 ஒருநாள் கனவு உலகக்கோப்பை அணி
1. குவின்டன் டி காக் (தென் ஆப்ரிக்கா)
2. ரோகித் சர்மா (இந்தியா)
3. விராட் கோலி (இந்தியா)
4. டெரில் மிட்சல் (நியூசிலாந்து)
5. கே.எல்.ராகுல் (இந்தியா)
6. கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
7. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
8. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
9. தில்ஷன் மதுசங்கா (இலங்கை)
10. ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா)
11. முகமது ஷமி (இந்தியா)
🇮🇳 x 6
🇦🇺 x 2
🇳🇿 🇿🇦 🇱🇰 x 1Presenting the #CWC23 Team of the Tournament 👉 https://t.co/wgt51aC4CA pic.twitter.com/X6PJVNZHdq
— ICC (@ICC) November 20, 2023
அவர்களின் செயல்பாடு எப்படி?
தென் ஆப்ரிக்க துவக்க ஆட்டக்காரரான குவின்டன் டி காக், இந்த தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் 594 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா, தொடர் முழுவதும் 31 சிக்ஸ்களுடன் வான வேடிக்கை காட்டி, 11 போட்டிகளில் 597 ரன்களை விளாசியுள்ளார்.
கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சினின் பல இமாலய சாதனைகளை முறியடித்த கிங் கோலி, 95.62 சராசரியுடன் 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் பல வெற்றிகளில் உறுதுணையாக இருந்து, 9 இன்னிங்ஸ்களில் டெரில் மிட்சல் 552 ரன்கள் குவித்து, இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
இவரைப் போலவே, இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் பல முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடிய கே.எல்.ராகுல், 75.33 சராசரியுடன் இந்த தொடரில் 452 ரன்களை குவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு வரலாற்று இரட்டை சதத்தை பதிவு செய்த ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என 2 பிரிவுகளிலும் முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா, 4.25 என்ற சிறந்த எகனாமியுடன் 16 விக்கெட்களை வீழ்த்தி, பேட்டிங்கில் 120 ரன்களையும் குவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில், 4.06 எகானாமியுடன் இந்தியாவுக்காக மிகச்சிறப்பாக பந்துவீசியுள்ள ஜஸ்பிரீத் பும்ரா, 20 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இந்த தொடர் முழுவதும் இலங்கை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும், அந்த அணிக்காக சிறப்பாக பந்துவீசிய தில்ஷன் மதுசங்கா 21 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
ஆஸ்திரேலியா அணிக்காக சுழற்பந்துவீச்சில் முக்கிய பங்குவகித்த ஆடம் ஜாம்பா, இந்த தொடரில் 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக, தொடரின் 5வது போட்டியில் அதிரடி துவக்கம் அளித்து 3 முறை 5 விக்கெட்களை கைப்பற்றிய முகமது ஷமி, வெறும் 7 போட்டிகள் மட்டுமே விளையாடி 24 விக்கெட்களை வீழ்த்தி, இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
மரியாதை தெரியாத இடத்துல கொடுத்துட்டோமே: அப்டேட் குமாரு
”ஆனந்த்ராஜ் சாருக்கு தான் சிறந்த நடிகைக்கான விருது”: 80ஸ் பில்டப் விழாவில் ருசிகரம்!