Treesa Jolly & Gayatri Gopichand: சிங்கப்பூரில் 2024-ஆம் ஆண்டுக்கான ‘சிங்கப்பூர் ஓபன்’ தொடர், கடந்த மே 28 அன்று துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை பங்கேற்றது.
உலக மகளிர் இரட்டையர் பேட்மின்டன் தரவரிசையில் 30வது இடத்தில் உள்ள இந்த ஜோடி, இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஒரு அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த மே 30 அன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், இந்த ஜோடி உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பேக் ஹா னா மற்றும் லீ சோ ஹீ இணையை எதிர்கொண்டது. அப்போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வெண்ணம் 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று பேக் ஹா னா மற்றும் லீ சோ ஹீ இணையைதொடரில் இருந்து வெளியேற்றிய த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை காலிறுதிக்கு முன்னேறியது.
இதை தொடர்ந்து, மே 31 அன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள கிம் சோ யோங் மற்றும் கோங் ஹீ யோங் இணையை த்ரீஷா – காயத்ரி ஜோடி எதிர்கொண்டது.
இப்போட்டியில், முதல் செட்டை 18-21 என பறிகொடுத்த த்ரீஷா – காயத்ரி இணை, 2வது செட்டில் 12-18 என பின்தங்கியிருந்தது. ஆனால், அங்கிருந்து ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, த்ரீஷா – காயத்ரி ஜோடி 2வது செட்டை 21-19 என கைப்பற்றியது.
இதை தொடர்ந்து, 3வது செட்டிலும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடிய இந்த வீராங்கனைகள், அந்த செட்டை 24-22 என கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து, காலிறுதியில் 18-21, 21-19, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த், தற்போது அதிரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த ஜோடி, அரையிறுதியில் உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த நமி மட்சுயாமா & சிஹாரு ஷிடா இணையை எதிர்கொள்கிறது.
த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி சிங்கப்பூர் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டத்தை கையில் ஏந்த இன்னும் 2 வெற்றிகளே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனாய், லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக் – சிராக் என அனைவருமே தொடரில் இருந்து தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், இவர்கள் மட்டுமே அரையிறுதி வரை முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
+1
+1
+1
+1
+1
+1
+1