சுப்மன் கில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.
தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள். முதல் போட்டியில் நியூசிலாந்தும் 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 1) அகமதாபாத்தில் உள்ள மோடி விளையாட்டு மைதானத்தில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்ற உறுதியோடு இரண்டு அணிகளும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களும், அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து 12.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

விராட் சாதனையை முறியடித்த கில்
நேற்றைய போட்டியில் இந்தியா 234 ரன்களை குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தான். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கில், 63 பந்துகளில் கில் 7 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 126 ரன்கள் எடுத்து 20 ஓவர் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டி20 கிரிக்கெட்டில் 126 ரன்களை அடித்ததன் மூலம் சுப்மன் கில், டி20 போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கில். இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி 122 ரன்கள் அடித்து இந்த சாதனையைப் படைத்தார்.
அதுமட்டுமின்றி, சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரராகவும் உள்ளார் கில். இதுவரை ரோகித் ஷர்மா மட்டும் தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
மேலும், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 ஆகிய 3 வகையான சர்வதேச போட்டிகளிலும் சதம் அடித்த 5வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கில்.
குவியும் பாராட்டுகள்
இந்திய அணியின் இளம் வீரர் சூப்பர் ஃபார்மில் உள்ளதால் ரசிகர்கள் தொடங்கி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் சுப்மன் கில்லை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, “வருங்காலம் இங்கு இருக்கிறது” என தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து பாராட்டியுள்ளார்.
விராட் கோலியின் ஸ்டோரியை பார்த்த பலரும் விராட் கோலிக்கு அடுத்த வீரராக சுப்மன் கில் இருக்கிறார் என்று புகழ்ந்து வருகின்றனர்.
மோனிஷா
கியாரா – சித்தார்த் ஜோடி திருமணம் : களைகட்டும் ஜெய்சால்மர் பேலஸ்!
தை வெள்ளியில் வெளியாகும் 7 படங்கள்!
3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!