சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சுப்மன் கில் விளக்கம் அளித்துள்ளார். shubman gill hot reply on rohit retirement
2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2023 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோற்றதற்கு பழிவாங்கும் விதமாக நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக உள்ளது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் வென்ற பிறகு டி20 வடிவ போட்டியில் இருந்து மூத்த வீரர்களான கோலியும், ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர்.
தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருவரும் ஆடிவரும் நிலையில், சமீபகாலமாக ரன் குவிப்பத்தில் ஹிட் மேன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4 போட்டியில் 217 ரன்கள் அடித்து 4வது இடத்தில் உள்ளார். ஆனால் வெறும் 104 ரன்கள் குவித்து 26வது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா.

இந்த நிலையில் அவர் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக செய்தியாளர்கள் இந்தியாவின் துணை கேப்டனும், தொடக்க வீரருமான சுப்மன் கில்லிடம் இன்று கேள்வி எழுப்பினர்.
சாம்பியன்ஸ் டிராபியை பற்றி மட்டுமே…
அதற்கு அவர், “இதுவரை நாங்கள் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது பற்றி மட்டுமே விவாதித்து வந்தோம். இது குறித்து அவர் என்னிடமோ அல்லது அணியிடமோ பேசவில்லை. ரோஹித் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று கூட நான் நினைக்கவில்லை” என்று சுப்மன் கில் கூறினார்.
மேலும் அவர், “2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐசிசி போட்டியின் இரண்டாவது இறுதிப் போட்டியில் விளையாடுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை நாங்கள் வெற்றி பெறவில்லை. இந்த முறை அதைச் செய்ய முயற்சிப்போம். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை மற்றொரு ஆட்டமாக மட்டும் கருத முடியாது. பெரிய போட்டிகளின் அழுத்தம் நிச்சயமாக உள்ளது. எனினும் இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளது” என்று கில் தெரிவித்தார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.