சரவெடி… அதிரடி… இரட்டை சதம்! : சுப்மன் கில் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல்

Published On:

| By christopher

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பம் முதலே ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இரட்டை சதம் (208) அடித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இன்று (ஜனவரி 18) தொடங்கியது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.

கோலோச்சிய சுப்மன் கில்

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்தும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தினை இருவரும் வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 60 ரன்களில் இருந்த போது ரோகித் சர்மா, டிக்னர் பந்து வீச்சில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகி 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் இஷான் கிஷன் (5), சூர்ய குமார் யாதவ் (34) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும் மறுப்பக்கம் நிலைத்து நின்று ஆடி வந்த தொடக்க வீரர் சுப்மன் கில் 87 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை விளாசினார்.

மொத்தமாக தனது 19 ஆவது இன்னிங்ஸில் 3வது சதத்தை அடித்து கில், குறைந்த இன்னிங்ஸில் 3 சதங்களை அடித்த 2வது இந்திய வீரர் மற்றும் குறைந்த இன்னிங்க்ஸில் ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைகளை படைத்தார்.

அதிரடி இரட்டைச் சதம்

அதன்பின்னரும் தனது நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய சுப்மன் கில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர், 49வது ஓவரின் முதல் 3 பந்துகளை ஹாட்ரிக் சிக்ஸர்களாக பறக்கவிட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

சதத்தை பதிவு செய்ய 87 பந்துகளை எடுத்து கொண்ட சுப்மன் கில், இரட்டை சதத்திற்கு மேலும் 58 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். அதில் 18 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

சுப்மன் கில் படைத்த / முறியடித்த சாதனைகள்

இதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் சுப்மன் கில்.

ஆட்டத்தில் 181 ரன்களை குவித்தபோது, ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் (175) சாதனையை முறியடித்தார்.

188 ரன்களை எடுத்தபோது, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (186) சாதனையை முறியடித்தார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை பதிவு செய்த இளம்வீரர் (23 வருடம் 132 நாட்கள்) என்ற சாதனை இப்போது சுப்மன் கில் வசமாகியுள்ளது.

கடந்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து இந்திய அணியைச் சேர்ந்த இஷான் கிஷன் (24 வருடம் 145 நாட்கள்) இந்த சாதனையை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 45 மற்றும் 125 ரன்களில் இருந்தபோது, சுப்மன் கில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்புகளை நியூசிலாந்து வீரர்கள் வீணடித்தனர். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கில், தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களை பதிவு செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

5வது இந்தியராக சுப்மன் கில் இந்த பட்டியலில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர்.

இந்தியர்களை தவிர்த்து கிறிஸ் கெயில், மார்டின் குப்தில், ஃபகர் சமான் ஆகியோரும் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

இறுதியில் 149 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் 9 சிக்சர், 19 பவுண்டரியுடன் 208 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

நடிகை அமலாபால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்: துறை அமைச்சர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share