இந்திய நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லுக்கு, 2023 உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னதாக ‘டெங்கு’ காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவரால் பங்கு பெறமுடியவில்லை. அதன் பிறகும், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு குறையாததால், டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவரால் பங்குபெற முடியவில்லை.
மேலும், காய்ச்சலின் தீவிரம் குறையாததால், இந்திய அணியுடன் டெல்லிக்கு பயணிக்காமல், சென்னையிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இதனிடையில், அவருக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு திடீரென குறைந்ததால், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டார். ஒருநாள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், மீண்டும் உணவக விடுதியில் மருத்துவ கண்காணிப்பில் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், வரும் அக்டோபர் 14 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள நிலையில், சுப்மன் கில் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் வலை பயிற்சியிலும் இன்று ஈடுபட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட சுப்மன் கில் 99% தகுதியாக உள்ளார்” என தெரிவித்துள்ளார். இந்த செய்தி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுப்மன் கில் இல்லாத நேரத்தில், ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
சேப்பாக்கம் மைதானத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு போஸ்டர்!
டிஜிட்டல் திண்ணை: திமுக ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டம்- கூட்டணி கட்சி திடீர் முடிவு!