டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு, சென்னையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னதாக, திருவனந்தபுரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி, கடந்த அக்டோபர் 8 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடுவதற்காக சென்னை வந்திருந்தது.
அப்போது, சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பின், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அவருக்கு உடல்நிலை சரி இல்லாததை உறுதி செய்தனர்.
இந்நிலையில், காய்ச்சலில் இருந்து அவர் முழுமையாக மீளாததால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக, இந்திய அணி நேற்று (அக்டோபர் 9) சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது.
ஆனால், இந்த அணியுடன் சுப்மன் கில் டெல்லி செல்லவில்லை. இது குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“சுப்மன் கில் காய்ச்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையாததால், அவர் சென்னையிலேயே தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது உலகக்கோப்பை போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்”, என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு குறைந்துள்ளதால், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வரும் அக்டோபர் 14 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியிலும், சுப்மன் கில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தண்ணீரை விலைக்கு வாங்கும் டெல்டா விவசாயிகள்!
அவதூறு பேச்சு: பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த குமரகுரு