நியூசிலாந்து ஒருநாள் தொடர் : இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி நாளை ஹைதராபாத் ராஜூவ் காந்தி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. ஏற்கெனவே இதில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் குறித்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டு இருந்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்
இந்நிலையில் நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியுள்ளார்.
அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு பதிலாக பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் விலகல் தற்போது இந்திய அணியின் சூறாவளி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவுக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பை தந்துள்ளது. கே.எல்.ராகுலும் தனது திருமணத்திற்காக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஃபார்மில் படிதார்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ரஜத் படிதார் தற்போது பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் அடித்து பெங்களூர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் 51 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள படிதார், 3 சதங்கள் மற்றும் 8 அரைசதங்களுடன் 97.45 ஸ்ட்ரைக்-ரேட்டை வைத்துள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிராக பிசிசி வெளியிட்ட இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் அணி வீரர்கள் விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.
கிறிஸ்டோபர் ஜெமா
465 தற்காலிக ஆசிரியர்கள்: ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!