மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், உ.பி வாரியர்ஸ் அணிகளும் மோதிக்கொண்டன. பெங்களுருவின் சின்னசாமி மைதானத்தில், ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ஆர்.சி.பி மகளிர் அணி 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் தொடரில் களமிறங்கியது. Rcb beat Upw by 2 runs
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற உ.பி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலைஸா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி, சோபி டிவைன், ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி என ஒரு அதிரடியான டாப் ஆர்டரை கொண்டிருந்தபோதும், துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இக்கட்டான சூழலுக்கு சென்றது. சோபி டிவைன் 1 ரன்னுக்கும், ஸ்மிருதி மந்தனா 13 ரன்களுக்கும், எல்லிஸ் பெர்ரி 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், அதன்பின் 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சபினேனி மோகனா மற்றும் ரிச்சா கோஷ் பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். அரைசதம் கடந்த மோகனா 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி, ரிச்சா கோஷ் 37 பந்துகளில் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் சேர்த்தது.
பின், 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய உ.பி வாரியர்ஸ் அணியின் கேப்டனும் துவக்க ஆட்டக்காரருமான அலைஸா ஹீலி 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதை தொடர்ந்து, விரிந்தா தினேஷ் – தஹிலா மெக்ராத் ஜோடி சேர்ந்து, அணியின் எண்ணிக்கையை சீராக உயர்த்தினாலும், ஆட்டத்தின் 9வது ஓவரில் இவர்கள் இருவரின் விக்கெட்களையும் வீழ்த்தி பெங்களூரு அணிக்கு ஷோபனா ஆஷா ஒரு திருப்பத்தை அளித்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த கிரேஸ் ஹாரிஸ் – ஸ்வேதா செராவத் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க துவங்கினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 77 ரன்களை குவித்தபோது, மீண்டும் பெங்களூரு அணிக்கு ஒரு அதிரடி திருப்பத்தை அளித்தார், ஷோபனா ஆஷா. 17வது ஓவரில் இந்த ஜோடியை ஷோபனா ஆஷா ஃபெவிலியனுக்கு அனுப்பினார். அதே ஓவரில், கிரண் நவ்கிரே விக்கெட்டையும் சோபனா வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து, கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலைக்கு உ.பி வாரியர்ஸ் சென்றது. ஆனால், அந்த அணியால் கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
முன்னதாக, மும்பை – டெல்லி அணிகள் இடையேயான போட்டியில், மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்றைய போட்டியும் கடைசி பந்து வரை ரசிகர்களை நுனி இருக்கையில் அமரவைத்துள்ளது, தொடரின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இப்போட்டியில், பெங்களூரு அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்திய ஷோபனா ஆஷா, ‘ஆட்ட நாயகி’ விருதை வென்றார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?
Rcb beat Upw by 2 runs