பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் குழு தேர்வு வாரியம் மீது, தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 15) அன்று வெளியானது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், துணை கேப்டன் ஷதப் கான், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா அஃப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வில், பெரிய மாற்றம் எதுவும் செய்யாமல், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் அணியை போலவே உள்ளது.
இதனால் தேர்வாளர்கள் மீது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்.
உலக கோப்பை டி20 அணி வீரர்கள் தேர்வு குறித்து அவர் கூறும்போது, “பாகிஸ்தான் அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் வலுவாக இல்லை. இதனால் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்று அச்சப்படுகிறேன். பேட்டிங் தரவரிசை சரியாக அமையவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கடினமான காலம் வந்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இதனை விட சிறந்த அணி வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தற்போதைய பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டால், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.” என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் எதிர்கொள்கிறது.
செல்வம்
ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி?
நீட் குளறுபடி: தேர்வுத்தாளை ஆய்வு செய்ய மாணவிக்கு அனுமதி!