இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதை அடுத்து சக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரிஷப் பண்டுக்கு அறிவுரை கூறும் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆண்டின் இறுதியில் கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார்விபத்து விளையாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு பிஎம்டபிள்யூ காரில் பயணித்த ரிஷப் பண்ட் வாகனம் ஹரித்வார் மாவட்டம் மங்களூரு அருகில் காலை 5.30மணியளவில் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்தவுடன் காரின் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியேறியுள்ளார். பலத்த சேதமடைந்த அவரது கார் தீபற்றி எரிந்தது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக ரிஷப் பண்டை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து பிரதமர் மோடி அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார்.
மேலும் இந்திய அணி வீரர்கள் பண்ட் விரைந்து நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ரிஷப் பண்டுக்கு அவரது நெற்றியில் வெட்டுக்காயம், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளது மற்றும் வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் ரிஷப் பண்டுக்கு அறிவுரை கூறும் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரிஷப் பண்ட், ஷிகர் தவானிடம் தனக்கு ஏதாவது அறிவுரை வழங்கும்படி கேட்கிறார். அதற்கு ஷிகர் தவான், நீ கவனமாக வாகனம் ஓட்டவேண்டும் என்று ரிஷப் பண்டிடம் கூறுகிறார்.
2019-ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் மற்றும் தவான் ஆகிய இருவரும் விளையாடியபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகஅளவில் பகிரப்பட்டு வருகிறது.
செல்வம்