2024 ஐபிஎல் தொடரில் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த தொடரில் இரு அணிகளுமே இப்போட்டிக்கு முன்னதாக தலா 3 போட்டிகளில் விளையாடி இருந்தது. அதில், குஜராத் அணி 2-இல் வெற்றியும், 1-இல் தோல்வியும் அடைந்திருந்தது. மறுபுறத்தில் பஞ்சாப் அணி 2-இல் தோல்வியும் , 1-இல் வெற்றியும் பெற்றிருந்தது.
இப்படியான நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 11 ரன்கள் சேர்ந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 26 ரன்களுக்கு வெளியேறினார்.
ஆனால், மறுமுனையில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சுப்மன் கில், சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை புரட்டிப்போட்டனர். சாய் சுதர்சன் 19 பந்துகளில் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.
கடைசியில் வந்த ராகுல் திவாதியா 8 பந்துகளில் 23 ரன்களை குவிக்க, குஜராத் அணி 20 ஓவர்களில் 199 ரன்களை சேர்த்தது.
200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. தவான் 1 ரன்னுக்கும், பேர்ஸ்டோ 22 ரன்களுக்கும் வெளியேறினர்.
அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தாலும், அவரும் 35(24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின், சாம் கர்ரன் 5 ரன்களுக்கும், ஷிகந்தர் ராஸா 15 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் காரணமாக 111 ரன்களுக்கு 5 விக்கெட்களை பஞ்சாப் இழந்தது.
போட்டி முழுவதுமாக குஜராத் பக்கம் சென்றதாக அனைவரும் எண்ணிய நிலையில் களமிறங்கிய ஷஷாங்க் சிங், 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஒரு மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு உதவியாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களை குவிக்க, பஞ்சாப் அணி கடைசி ஓவரில் ஒரு த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், வேறு ஒரு ஷஷாங்க் சிங் என்ற வீரருக்கு பதிலாக, இந்த ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் அணி தவறுதலாக ஏலத்தில் எடுத்திருந்தது. அது குறித்து ஒரு விளக்கத்தையும் பஞ்சாப் அணி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், பஞ்சாப் அணி தவறுதலாக தன்னை ஏலத்தில் எடுத்ததற்கு தனது ஆட்டத்தின் மூலம் பதில் கொடுத்துள்ளார், ஷஷாங்க் சிங்.
இப்போட்டியில், 4 சிக்ஸ், 6 ஃபோர்களுடன் 29 பந்துகளில் 61 ரன்கள் குவித்த இந்த ஷஷாங்க் சிங், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
முன்னதாக, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலும், பஞ்சாப் அணிக்காக 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து, ஷஷாங்க் சிங் அதிரடியாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…