மகேந்திர சிங் தோனி இன்னும் 3 அல்லது 4 வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாடலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் எம்.எஸ். தோனி குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் பேசியுள்ளார்.
கத்தார் தோஹாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்றிருக்கும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிதான் தோனிக்கு கடைசி போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை.
அவர் இன்னும் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு உடல் தகுதியுடன் இருக்கிறார்.
அவருடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மிகவும் நன்றாக இருக்கிறது. அவருடைய ஆட்டத்தைப் போலவே அவருடைய தலைமையும் சிறப்பான ஒன்று.
அவருடைய உடல் தகுதி மற்றும் விளையாட்டின் மைண்ட் ரீடிங் அவரை நல்ல தலைவராக்குகிறது.
மைதானத்தில் தோனியின் அபாரமான திறமையும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது” என்று பேசியிருந்தார்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவர் இணையற்ற புகழைப் பெற்றுள்ளார்.
”கேப்டன் கூல்” என்று அழைக்கப்படும் எம்.எஸ், தோனி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தொடங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வருகிறார்.
தோனி 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தொடரைக் கைப்பற்றவில்லை என்றாலும் தோனிக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்திருந்தது.
மேலும், அவர் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் அரைசதத்தைக் கடந்த ஐபிஎல் சீசனில் அடித்திருந்ததோடு, 123.40 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 33.14 சராசரியுடன் 232 ரன்கள் குவித்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அபாரமான திறமையை தோனி வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
மோனிஷா
இலங்கை தமிழர்களுக்கு வீடு: ரூ.233 கோடி ஒதுக்கீடு!
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!
“முன்பே வா என் அன்பே வா” பாடல்: ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!