வெஸ்ட் இண்டிஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. 34 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டிஸ் அணி பாகிஸ்தான் அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்துள்ளது.
இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் ஷானு மசூத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் இடக்கு மடக்காக கேள்வி கேட்டார். ‘இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் உங்களை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன், நீங்களே விலகி விடலாமே ? ‘ என்று கேள்வி எழுப்பினார்.
முதலில், இந்த கேள்வியை தவிர்த்த மசூத், அடுத்த கேள்வி என்று போய் கொண்டிருந்தார். ஆனாலும், விடாத அந்த செய்தியாளர்’ நீங்கள் உண்மையை பேச வேண்டும். நடப்பவைகளை பேச வேண்டும். நீங்கள் தோல்விக்கு சொல்லும் காரணங்கள் உண்மையாக இல்லை ‘என்று மீண்டும் மசூத்தை சீண்டினார்.
இதனால், கடுப்பான ஷானு மசூத், ‘ இது உங்கள் கருத்து. அதை நான் மதிக்கிறேன். ஆனால், உங்கள் கேள்வியில் அடுத்தவர்களை அவமரியாதை செய்யும் தொனி உள்ளது. வீரர்களை அவமரியாதை செய்வது அப்பட்டமாக தெரிகிறது. என்னையோ மற்ற வீரர்களையோ அவமதிப்பதை ஏற்று கொள்ள முடியாது. நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் வேண்டுமானால் மற்றவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம். ஆனால், நாங்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறோம்.பிசிபி முடிவெடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள போகிறேன். கடைசியாக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3ல் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்’ என்று பதில் கூறினார்.