‘இனி அப்படி செய்யாதே’: சிராஜை எச்சரித்த ஷமி

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து முகமது ஷமி, சிராஜுக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை இந்திய வேகக்கூட்டணியான முகமது சிராஜ் – ஷமி சிதறடித்தது. ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு சுருண்ட நிலையில் அவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் 40 ரன்கள் அடிப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா(25), கே.எல்.ராகுல்(75*), மற்றும் ஜடேஜா(45*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷமி – சிராஜ் இடையேயான உரையாடல் வீடியோவை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

அதில் சிராஜிடம், விக்கெட் எடுத்தபின் அதை நீங்கள் கொண்டாடும் ஸ்டைலுக்கு பின் உள்ள ரகசியம் என்ன? என்று ஷமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், “எனது கொண்டாட்டம் எளிமையானது. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகன். அதனால் கோல் அடித்த பின் ரொனால்டோ என்ன செய்வாரோ, அதே போன்று செய்யவே முயற்சிக்கிறேன். நான் ஒரு பேட்ஸ்மேனை அவுட் ஆக்கும் போது, அந்த பாணியில் தான் அதை கொண்டாடுகிறேன்” என்றார்.

இதனைக்கேட்ட ஷமி, இளம் வீரர் சிராஜ்க்கு அக்கறையுடன் ஒரு அறிவுரை கூறினார். அவர், “நான் உங்களுக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். நீங்கள் ஒருவரின் ரசிகராக இருப்பது நல்லது.

ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற முறையில் ரொனோல்டோ போன்று தாவி குதிப்பதை தவிர்க்க வேண்டும். அது உங்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

அதற்கு சிராஜ், “உங்கள் அக்கறைக்கு நன்றி சீனியர்!” என்றார்.

இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர். மைதானத்தில் நடைபெறுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து 3 வழக்குகள்!

100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் தமிழ் வெப் சீரிஸ்கள்!

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
2
+1
4

Leave a Reply

Your email address will not be published.