இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் இன்று (நவம்பர் 7) விலகியுள்ளார்.
வங்கதேசம், இலங்கை அணிகள் மோதிய ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் பேட்டிங்கின் போது ஷகிப் அல் ஹசனுக்கு இடது கை ஆள் காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு தொடர்ந்து அவர் பேட்டிங் செய்தார். இந்த போட்டியில் 65 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் ஷகிப் அல் ஹசன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வங்கதேச அணி வீழ்த்தியது.
சிறப்பான பேட்டிங் மற்றும் இலங்கை அணியின் இரண்டு முக்கிய ஆட்டக்காரர்களான குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம விக்கெட்டுகளை ஷகிப் அல் ஹசன் கைப்பற்றியதால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஷகிப் அல் ஹசனுக்கு கையில் ஏற்பட்ட காயம் குறித்து வங்கதேச அணியின் பிஸியோ மருத்துவர் பெய்ஜெதுல் இஸ்லாம் கான் கூறும்போது, “பேட்டிங் செய்தபோது ஷகிப் அல் ஹசனுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அடிபட்டது. வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஆடினார். போட்டிக்கு பிறகு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவிலிருந்து அவர் குணமாக இரண்டு முதல் நான்கு வாரங்களாகலாம். அதனால் அவர் இன்று வங்கதேசம் திரும்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை போட்டியிலிருந்து ஷகிப் அல் ஹசன் விலகியதால் அவருக்கு பதிலாக நசும் அஹமது அல்லது மெஹதி ஹசன் ஆகிய இருவரில் ஒருவர் நவம்பர் 11-ஆம் தேதி புனேவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் போட்டியில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ வங்கதேச அணி கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிறந்தநாளில் அரசுக்கு கமல் வைத்த கோரிக்கை!
ஹைட்ரோகார்பன் கிணறுகள்… ராமநாதபுரமே பாலைவனமாக மாறும்: வேல்முருகன்