இந்திய அணி கேப்டனுக்கு தண்டனை : வரவேற்ற பாகிஸ்தான் ஜாம்பவான்!

Published On:

| By christopher

shahid welcomes icc decision

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் செயலுக்கு தண்டனை அளிக்கப்பட்டதை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்  ஷாகித் அப்ரிடி வரவேற்றுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று முடிந்ததால், வெற்றிக் கோப்பையை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி கடந்த  22ம் தேதி நடந்தது. அதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் 225 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதை அடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

தொடரும் 1-1 என்ற கணக்கில் முடிந்ததால் இரு அணி கேப்டன்களும் ஒன்றாக கோப்பை வாங்கியபோது, ‘ஏன் நடுவர்களையும் சேர்த்து அழைக்கக்கூடாது’ என்பதுபோல் வங்கதேச அணி கேப்டனை பார்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தன.

ஹர்மன்ப்ரீத்தின் செயலை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கண்டித்தனர். மேலும் அவருக்கும் கடும் தண்டனை அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, விசாரணையில் இறங்கிய ஐசிசி, ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

இதனால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆசியக்கோப்பையில் காலிறுதி, அரையிறுதி இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் போட்டியில் தனக்கு அவுட் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டம்புகளை பேட்டால் தாக்கியதற்கும் (50) போட்டிக்கு பின்னர் நடுவர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கும் (25) என மொத்தம்  75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் இந்த தண்டனை முடிவை வரவேற்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி அந்நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “இது போன்ற இந்திய அணியில் மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் பல்வேறு அணிகள் இதுபோன்று செய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

எனினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.

ஆனால் ஹர்மன்பீரித் செய்தது கொஞ்சம் அதிகம். ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய குற்றம். அவருக்கு தண்டனை அளித்ததன் மூலம் நீங்கள் எதிர்காலத்திற்கு ஒரு முன்மாதிரியான விஷயத்தை கூறியுள்ளீர்கள்.

கிரிக்கெட்டில் வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால் கட்டுப்பாடான ஆக்ரோஷம் நல்லது” என்று அப்ரிடி கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டிய கடன் செயலி: இளைஞர் தற்கொலை!

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel