டென்னிஸ் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்குபவர் அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். 41வயதாகும் இவர் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் தொடருக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்றுடன் (செப்டம்பர் 3 ) ஒய்வு பெற்றுள்ளார்.
இன்று (செப்டம்பர் 3 ) நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக்குடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
இதனால் அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த ஆட்டத்துடன் அவர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
14 வயதில் டென்னிஸ் உலகிற்கு வந்த செரீனா வில்லியம்ஸ், தொடர்ந்து 27 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ இங்கே இருக்கும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன், டென்னிஸ் பல ஆண்டுகளாக, தசாப்தங்களாக என் பக்கத்தில் இருந்தது,
வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
அதுவும் நமக்கு பிடித்தமான ஒன்றை விட்டு விலக வேண்டியிருக்கும். நான் ஒரு தாயாக கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.
நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை பரிணாமம்.
நான் டென்னிஸிலிருந்து விலகி, எனக்கு முக்கியமான மற்ற விஷயங்களை நோக்கிப் பரிணமித்து வருகிறேன். இது அனைத்தும் என் பெற்றோரிடமிருந்து தொடங்கியது.
அவர்கள் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்கள். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
என் சகோதரி வீனஸ் இல்லாவிட்டால் நான் செரீனாவாக இருக்க மாட்டேன். என் சகோதரிக்கு நன்றி.
நான் ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் நிச்சயம் டென்னிஸில் இருந்து விலகி இருக்க மாட்டேன் . தற்போது என் குழந்தையை வளர்ப்பதில் நான் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“நான் ஆணாக பிறந்திருந்தால்…” சாதனைப் பெண் செரீனாவின் வேதனைக் கதை!