இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் வீரேந்திர சேவாக்குக்கு தனி மதிப்பு உண்டு. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் இரண்டு முறை 300 ரன்களை அடித்து சாதனை படைத்தவர் இவர்.
தற்போது, வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யாவீர் டெல்லி மாநில 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், கூச் பெகார் டிராபியில் (டெஸ்ட் கிரிக்கெட்) டெல்லி அணி மேகலாயா அணியுடன் ஷில்லாங்கில் மோதியது. முதலில் விளையாடிய மேகலாயா அணி 260 ரன்களை எடுத்தது. பின்னர் பேட் செய்த டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 468 ரன்களை அடித்தது. அதில் ஆரியவீர் 229 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்தார். இதில் இரண்டு சிக்சர்களும் 34 பவுண்டரிகளும் அடங்கும்.
கிரிக்கெட் உலகில் மிக டேஞ்சரான பேட்ஸ்மேனாக வீரேந்திர சேவக் பார்க்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே இரு முச்சதமும் சேவாக்கின் கணக்கில் உள்ளது.
முல்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் 319 ரன்களை சேவாக் அடித்தார். இதுதான் டெஸ்ட் போட்டியில் சேவாக் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். டெஸ்ட் போட்டியை ஒரு நாள் ஆட்டம் போல ஆடுவது இவரின் தனித்திறனாக பார்க்கப்பட்டது.
தற்போது, தனது மகன் ஆரியாவீருக்கு சேவாக் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி, ஏதாவது ஒரு போட்டியில் தனது சாதனை ரன்னான 319 ரன்களை கடந்தால் ஃபெராரி கார் வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தற்போது, ஆரியாவீருக்கு 17 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் காலம் இருக்கிறது. தந்தையின் சாதனையை முறியடித்து ஃபெராரி காரை பரிசாக பெறுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… சவரன் 57,000-ஐ தாண்டியது!
பயணிகள் கவனத்திற்கு… சென்னை பீச் – தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்!
Comments are closed.