உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் ஆட்டத்திலேயே சவுதி அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் குரூப் ’சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் லுசைல் மைதானத்தில் இன்று மோதின.
மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை போட்டி இது என்பதால் சவூதிக்கு எதிரான அர்ஜென்டினா அணியின் இந்த முதல் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மெஸ்ஸியின் சாதனை கோல்!
அதன்படி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணியின் முதல் கோலை பதிவு செய்தார் மெஸ்ஸி.
அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த ஓட்டுமொத்த ரசிகர்களும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
மேலும் இந்த உலகக்கோப்பையில் 2006, 2014, 2018 மற்றும் 2022 என நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் பதிவு செய்தவர் என்ற சாதனையை எட்டியுள்ளார் மெஸ்ஸி.
இதற்கு முன்னர் பீலே, சீலர், க்ளோஸ் மற்றும் ரொனால்டோ போன்ற வீரர்கள் நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் இந்த சாதனையை எட்டியுள்ளனர்.
முதல் பாதியில் முன்னிலை!
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை அர்ஜென்டினா அணி சவுதியின் வலைக்குள் பந்தை தள்ளிய போதும் அவை ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் காலோச்சிய சவூதி!
எனினும் இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் சவுதியின் சலே அல் ஷெஹ்ரி மற்றும் அல் தவ்சாரி ஆகியோர் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தனர்.
இதனால் 90 நிமிட நேர முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது சவுதி அரேபியா. அதனை தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் கடைசி வரை போராடிய அர்ஜென்டினா அணியின் அனைத்து முயற்சிகளையும் சவுதி அரேபியா தவிடு பொடியாக்கியது.
கடைசி வரை போராட்டம் வீண்!
இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்திலேயே சவுதி அரேபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளது.
உலக கால்பந்து தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா அணி, 51வது இடத்தில் இருக்கும் சவுதி அணியிடம் வீழ்ந்தது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மழைக்கு நடுவே தடுமாறிய நியூசிலாந்து… தொடரை கைப்பற்றிய இந்தியா!
‘லவ் டுடே’ வசூலை எட்டிப்பிடித்ததா ‘கலகத் தலைவன்’?