கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானவர் சஞ்சு சாம்சன். இதுவரை 11 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சஞ்சு சாம்சன் இடம் அளிக்கப்படாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நேற்று நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. மேலும், முந்தைய போட்டியில் பொறுப்பான முறையில் அவர் ஆடி 36 ரன்கள் எடுத்தாலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனாலும் ஆடும் லெவனில் வீரர்களை பேலன்ஸ் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் அவருக்கான வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருப்பதாக அணியின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை அரங்கில் சஞ்சு சாம்சனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் பேனர்களை தாங்கி நிற்கின்றனர் அவரது ரசிகர்கள். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. அதில் ‘என்றும் உங்களுடன், உங்களுக்கு ஆதரவாக’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆன்லைன் தடை காலாவதி: அடுத்தகட்டத்தில் தமிழக அரசு
தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்: உருவான புதிய ”சக்கரம்”