இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜித்தேஷ் ஷர்மா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி மும்பை வாண்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 163 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 13-வது ஓவரில் சஞ்சு சாம்சன் பீல்டிங் செய்த போது அவரது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
காயம் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி எல்லைக்கோடு அருகே சஞ்சு சாம்சன் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவரது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று பிசிசிஐ மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இதுவரை 11 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இது குறித்து தொடர்ச்சியாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிட்டு வந்தனர்.
கத்தாரில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மைதானத்தில் பதாகைகளை காண்பித்து வந்தனர். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சஞ்சு சாம்சன் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக மாற்று வீரர் யார் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜித்தேஷ் ஷர்மா அவருக்கு பதிலாக விளையாடுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
29 வயது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான ஜித்தேஷ் ஷர்மா இதற்கு முன்பாக பஞ்சாப் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 234 ரன்கள் எடுத்துள்ளார்.
முன்னதாக இவர் விதர்பா கிரிக்கெட் மற்றும் விஜய் ஹசாரா கோப்பை, சையது முஷ்டாக் அலி, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஜித்தேஷ் ஷர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செல்வம்
சென்னை பள்ளி மாணவர்களுக்காக 20 பேருந்துகள்: எந்த வழித்தடங்களில் தெரியுமா?
சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்: விண்ணை முட்டிய சிவ சிவ கோஷம்!